திருநெல்வேலி: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் மே மாதம் கனமழையானது கொட்டித் தீர்த்தது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு (Credits: ETV Bharat Tamilnadu) அதிலும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெருங்குடி பகுதி 2, சீலாத்திகுளம் கோட்டை, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இப்பகுதிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று (மே 27) நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர்ந்து பத்து நாட்கள் பெய்த மழையால் அறுவடை செய்ய முடியாமல் போனது. மழையில் நெல் பயிர்கள் முழுவதும் முளைத்து எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.
ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் செலவு செய்திருந்த நிலையில், அறுவடை நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. நமது முதலமைச்சர் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்குவார் என நம்புகிறேன்" என்று அப்பாவு கூறினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், 'கடந்த 10 தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் நெல்லை ராதாபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் தண்ணீருக்குள் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்டம் முழுவதும் மழையால் சேதமடைந்த நெல்மணிகளை ஆய்வு செய்து அரசு அறிக்கை பெற்றுப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விருந்துல ஏன் முட்டை வைக்கல? - தகராறில் அண்ணன் மகனுக்கு வெட்டு... தூத்துக்குடியில் நடந்த பயங்கரம்! - Poopunitha Neerattu Vizha