கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை, அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி உள் பட 8 அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றிணைந்து நேற்று (பிப்.7) சந்தித்தனர். அப்போது, தொகுதி வாரியாக உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாகப் பங்கீடு செய்வது என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
அதன் பின்னர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, "கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரத்தை கேரள அரசு தடுத்து வைத்துள்ளது. தமிழக அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்ததைப் போல், இப்போதும் அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. எனவே, அப்பணிகளையும் விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தர்.
தொடர்ந்து பேசிய அவர், "கோவைக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் நடைபெறவில்லை. குறிப்பாக, ஸ்மார் சிட்டி திட்ட முழுமைபடுத்துதல், விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்கள் முடக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளும் விரைவுபடுத்த வேண்டும். இதனால் கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.