மதுரை: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வாரத்திற்கு 3 முறை 17 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில், சிலம்பம் விரைவு ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தென் தமிழக ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே மதுரை கோட்டகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பண்டிகை கால விடுமுறை மற்றும் கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக, செங்கோட்டை - தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 20681/20682) இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரயிலில் கூடுதலாக 6 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு:அதன்படி இந்த ரயில்களில் நவம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டியும், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியும், 2 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியும் இணைக்கப்பட உள்ளன.