சென்னை:சென்னையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவரை டெல்லியில் வைத்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் கடத்தல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவி(47), கணேசன்(50), மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த மதன்(45) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நடத்தினர்.
போதைப் பொருள் கடத்தல்:
அதில், அவர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 38 கிலோ போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன மூலக்கூறு பொருட்கள், 51 லட்சம் பணம், 105 கிராம் தங்க நகை, 5 செல்போன், 2 பாஸ்போர்ட், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், விசாரணையில் இந்த கும்பல் இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப் பொருட்களை கடத்தியது அம்பலமாகியுள்ளது. பின்னர், ஜனவரி மூன்றாம் தேதி இந்த வழக்கு தொடர்பாக, சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா(45) மற்றும் சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன்(36) ஆகிய இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், மேலும் பல உண்மைகள் வெளிவந்துள்ளது. அதாவது, விசாரணையில் இவர்கள் போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் சேர்ந்த வெளி நாடுகளுக்கு துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் மூலக்கூறு பொருட்களை கடத்தி வந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து கடந்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.