வேலூர்: அண்டை மாநிலங்களில் இருந்து மாநில எல்லைகளின் வழியாகக் கஞ்சா கடத்தி வருவது வாடிக்கையாக்கிவிட்டது. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநில எல்லை பகுதி முழுவதும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை மாநில எல்லை சோதனை சாவடியில் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன் மற்றும் பால வெங்கட்ராமன், பயிற்சி உதவி ஆய்வாளர் பரத் ஆகியோர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாகச் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்து கொண்டிருந்த மூவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்ட பொழுது அதில் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் இவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாஜீ (33), சிஜோன் (23) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் ரோல் (27) என்பதும் கஞ்சாவை கேரளா மாநிலத்திற்கு கடத்திச்செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது.
மேலும் மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் பேருந்தில் எடுத்துச் சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் எனக் கருதி மாநில எல்லையில் இறங்கி நடந்து சென்று காட்பாடி பகுதியில் பேருந்தில் ஏறித் தப்பிவிடலாம் என எண்ணி வந்து போலீசாரிடம் பிடிபட்டுள்ளதாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகள் - க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கியது எப்படி? - BEEDI LEAVES SMUGGLE