சென்னை:சென்னை கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அதில், ரயில் மூலம் மும்பைக்குச் சென்று அங்கிருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்வது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்த ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த மாணிக்கம்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கோயம்பேடு பகுதிகளில் மாணவர்களைக் குறி வைத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வருவதும், இதற்காக மும்பைக்கு சுற்றுலா செல்வது போல, பணம் செலவழித்துச் சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்ததும் தெரியவந்தது.