சென்னை:கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்முறை அளிக்கப்பட்ட விவகாரத்தில், 15 நாளில் பரிந்துரை அறிக்கை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவே கிருஷ்ணகிரிக்கு விரைந்தனர். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியுடன் ஆலோசனை நடத்திவிட்டு, இரண்டு நாட்கள் அங்கே முகாம் அமைத்து விசாரணை நடத்துகின்றனர்.
அதாவது, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார்ப் பள்ளி பயிற்சி முகாமில் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும், போலீசார் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்திடவும், சமூக நலத்துறை செயலாளர் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்து பரிந்துரைகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவை நியமனம் செய்து, 15 நாளில் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.