தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கடந்த 2013ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்ட போதே தரமானதாக இல்லை என மக்கள் புகார் கூறி வந்தனர்.
இதற்கிடையில், 2017ஆம் ஆண்டில் ஒரு முறை பாலம் பழுதடைந்து வந்தது. இதற்காக ரூ.3 கேடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனை அடுத்து, 2020ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்த பாலத்தில் 9 முறை விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து வந்த மத்திய சாலை ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் பாலத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, பாலத்தை சீரமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், மீண்டும் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இத்தகைய சூழலில், சமூக ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்களும் இது குறித்துக் கூறுகையில், "இந்த பாலத்துக்கு அருகில் உள்ள சுமார் 125 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று சிறிய சேதம் கூட ஏற்படாமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய புதிய பாலம் அடிக்கடி சேதமடைவதால் அதன் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், 2 பாலங்களையும் சீரமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால், தரமில்லாத கான்ங்கீரிட்டை அகற்றாமல் உத்தரவாதம் இல்லாத ரசாயன பூச்சு மூலம் பாலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
இதுமட்டும் அல்லாது, பாலத்தின் தூண்களுக்கு இடையே அதிகமான இடைவெளி உள்ளதால் அதிர்வுகள் ஏற்பட்டு அடிக்கடி பழுதாகி வருகிறது. இதுபோன்று அடிக்கடி பாலம் சேதம் அடைவதைத் தவிர்க்க பாலத்தின் தளத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:விண்கல் விழுந்ததா? ஏலியன்களின் சதியா? திருப்பத்தூரில் ஏற்பட்ட மர்ம பள்ளத்தால் மக்கள் பீதி!