சென்னை:சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரங்கில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இணைந்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், பெரிய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இரும்புலியூர் மேம்பாலம் பகுதியில் இருந்து பல்லாவரம் வரை சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த ரேக்கா, ஜந்து வருடங்களாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகில் சிறிய பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜி.எஸ் டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் கடந்த ஐந்து நாட்களாக ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அதிகாரிகள் காவல் துறை பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.
இதையடுத்து தாம்பரம் வட்டாசியர் அலுவலகம் அருகே இருந்த ரேக்காவின் பெட்டிகடையை அகற்ற வந்தனர். அப்போது அவர், "எனக்கு முன்கூட்டியே எந்தவொரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை" என அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும், தனது பெட்டிக்கடையில் உள்ள பொருட்களை வாகனம் மூலம் அப்புறப்படுத்தி கொள்வதாக ரேக்கா கூறிய நிலையில், சிறிது நேரம்கூட காலஅவகாசம் கொடுக்காமல் ரேக்கா கண்முன்னே அவரது பெட்டிக் கடையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இதேபோன்று அதன் அருகே மேலும் இரண்டு பெட்டிக்கடைகளை அப்புறபடுத்திக்கொள்ள அவகாசம் கொடுக்காமல், கடைகளை அடித்து நொறுக்கிவிட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்கபட்ட கடைகாரார்கள் தங்களுக்கு வாழ்வாதரமாக இருந்த இந்த கடையை அகற்றியதால் வாழ்வதாரம் இழந்து நிற்கதியாய் நிற்கின்றோம். எங்களுக்கு சரியான இடம் ஒதுக்கி மீண்டும் புதிய கடை அமைத்து தர தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய விவகாரம்: கருணாபுரத்தில் அடங்காத மரண ஓலம்; கள்ளக்குறிச்சி மக்களின் தற்போதைய மனநிலை என்ன? - Kallakurichi Current Situation