சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024-இன் தொடக்க விழா இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தைப்போல், மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் "தமிழ் புதல்வன் திட்டம்" வரும் கல்வியாண்டிலேயே தொடக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “கடந்த 3 ஆண்டுகளில் துவங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் புரட்சித் திட்டங்கள். அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்னும் நோக்கில் தான் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. ‘பசித்தவனுக்கு உணவு கொடு பின்னர் போதனை செய்’ என்னும் விவேகானந்தரின் சொல்லுக்கு ஏற்ப காலை உணவு திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த தலைமுறை மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. உயர்கல்வி சேர்வோர் விகிதம் தமிழ்நாட்டில் உயர, இந்த நான் முதல்வன் திட்டம் மிக உதவியாக உள்ளது. 30 ஆயிரத்து 269 மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான துறைகளை எடுத்து பயில இந்த திட்டம் உதவியாக உள்ளது. நிலம், பணம் உள்ளிட்ட முதலீட்டை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். கல்வி என்னும் முதலீட்டை யாராலும் எடுக்க முடியாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் படிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் சராசரி அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது இலக்கு.