சென்னை:தற்போது தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் சிறுவர், சிறுமியரின் நலன் கருதி கோடைவிடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் நடைபெறும், அனைத்து வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (மே.09) அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிக்கையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-50 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.