தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீர் குட்டையாக மாறிய நீர்நிலைகள்; தாம்பரம் மாநகராட்சியின் திட்டம் தான் என்ன? - TAMBARAM LAKES CONDITION

தாம்பரம் மாநகராட்சியில் 40-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் கழிவுநீர் குட்டையாக மாறி அவலமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுக்குள் ஏழு பெரிய ஏரிகளை தேர்ந்தெடுத்து சீரமைக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் மாநகராட்சியின் நீர்நிலை
தாம்பரம் மாநகராட்சியின் நீர்நிலை (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2025, 9:39 PM IST

சென்னை: சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது தாம்பரம். சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் அதிக நீர்நிலைகளைக் கொண்ட மாநகராட்சியாகவும் தாம்பரம் உள்ளது.

அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சியில் சிட்லபாக்கம் ஏரி, பல்லாவரம் பெரிய ஏரி, நன்மங்கலம் ஏரி, அஸ்தினாபுரம் ஏரி, சேலையூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, திருப்பனந்தாள் ஏரி, பெருங்களத்தூர் ஏரி, சித்தேரி, கடப்பேரி உள்ளிட்ட சுமார் 45க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய ஏரிகள், குட்டைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் உள்ளன.

கழிவுநீர் குட்டையான ஏரிகள்

இந்த நீர்நிலைகள்தான் ஒரு காலத்தில் சென்னையின் பொக்கிஷமாக இருந்தன. மேலும் சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் இந்த ஏரிகளின் நீரை வைத்து விவசாயமும் செய்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து மக்கள் குடியேற்றம், ரியல் எஸ்டேட் பெருக்கம், கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரிய அளவில் இருந்த அனைத்து ஏரிகளும் காலப்போக்கில் சுருங்கி தற்போது கழிவுநீர் குட்டைகளாக காட்சியளிக்கின்றன.

கால்வாயில் கழிவு நீர் (ETV Bharat Tamil Nadu)

கடந்த அதிமுக ஆட்சியின்போது சிட்லபாக்கம் ஏரிக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டு ஏரி மறுசீரமைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களோடு ஏரியும் இணைந்திருக்க, ஏரியைச் சுற்றி நடைப்பாதை, குழந்தைகள் விளையாட்டு திடல், கழிவறைகள், மரக்கன்றுகள், பூங்காக்கள் அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இன்றும்கூட தினந்தோறும் காலை, மாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் சிட்லபாக்கம் ஏரியில் இளைப்பாரி வருகின்றனர்.

இதைத் தவிர வேறு எந்த ஒரு ஏரியையும் மீட்கும் முயற்சியில் தாம்பரம் மாநகராட்சியும், பொதுப்பணி துறையும் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கால்வாயில் குவிந்திருக்கும் குப்பை கழிவுகள் (ETV Bharat Tamil Nadu)

'வெள்ளம் சூழ காரணம்'

இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், '' தாம்பரம் மாநகராட்சியில் அதிகப்படியான நீர்நிலைகள் உள்ளதை காண்கிறோம். ஆனால் அனைத்தும் கழிவுநீர் கலப்பது மற்றும் குப்பைக் கொட்டுவதால் மிகப்பெரிய அளவில் மாசடைந்துள்ளன. மேலும் தாம்பரம் மாநகராட்சியில் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. அந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை இந்த கால்வாய்களில் விடுகின்றனர். இதனால் கழிவுநீர் மொத்தமாக ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் அனைத்து ஏரியும் நீரை உறிஞ்சும் தன்மையை இழந்து விடுகிறது. மேலும் அனைத்து ஏரிகளிலும் சாக்கடை நீர் தேங்கி இருப்பதால் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்க முடியாமல் போகிறது. இதனால்தான் மழைக்காலத்தில் தொடர்ச்சியாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதை பார்க்கிறோம்.

கால்வாயில் கழிவு நீர் (ETV Bharat Tamil Nadu)

மோசமான பாக்டீரியாக்கள்

தாம்பரம் மாநகராட்சியில் உள்ள மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததில் ஏழு இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், அதில் சில மோசமான பாக்டீரியாக்கள் தண்ணீரில் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஏரியை சுற்றியுள்ள 5 கிணறுகளில் இந்த வகை பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனால் ஏரிகள் மட்டும் மாசடையாமல் தண்ணீரை சேமிக்கும் கிணறுகளிலும் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சிறிய சிறிய குட்டை, குளங்களும் மாசடைந்து உள்ளன. தாம்பரம் மாநகராட்சி சென்னை மாநகராட்சியை போல அம்ருத் மற்றும் ஜல்ஜீவன் உள்ளிட்ட திட்டங்களில் நிதிகளைப் பெற்று ஏரிகளை சீரமைக்க வேண்டும்'' என்றார்.

ஆகாய தாமரை பெருகி காணப்படும் ஏரி (ETV Bharat Tamil Nadu)

மிஞ்சிய ஏரிகளிலும் கழிவுநீர்

சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறுகையில், "தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து ஏரிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு போக மிஞ்சி இருக்கும் அனைத்து ஏரிகளிலும் தற்போது தண்ணீர் உள்ளது. ஆனால் அந்தத் தண்ணீர் அனைத்தும் கழிவுநீர் மட்டும்தான். மேலும் அனைத்து ஏரிகளிலும் ஆகாய தாமரை பெருகி ஏரியே காணாமல் போனது போல் பசுமையாக காட்சியளிக்கிறது.

குரோம்பேட்டை பகுதியில் உள்ள வீரராகவன் ஏரி நிரம்பினால்தான் தாம்பரம் அரசு மருத்துவமனை, தேசிய சித்த அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் வரும். ஆனால், தற்போது அந்த ஏரி கெட்டுப் போய்விட்டது. தற்போது இருக்கும் ஏரிகளை அரசு மீட்டு கழிவுநீர் கலப்பதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, திருநீர்மலையில் உள்ள பெரிய ஏரியை நம்பி ஒரு காலத்தில் பெரிய அளவில் விவசாயம் நடைபெற்றது. ஆனால் தற்போது திருநீர்மலை ஏரியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஆனால் இந்த ஏரியை காப்பாற்ற பொதுப்பணித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நெமிலிச்சேரி ஏரி

கடந்த 2018 ஆம் ஆண்டு நெமிலிச்சேரி ஏரியை தன்னார்வலர்களுடன் இணைந்து ரூ.95 லட்சம் வசூலித்து நாங்கள் காப்பாற்றினோம். ஆனால் தற்போது குரோம்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் இருந்தும் தொடர்ச்சியாக நெமிலிச்சேரி ஏரியில் கழிவுநீர் கலந்து வருகிறது. நாங்கள் அந்த ஏரியை புனரமைத்தும் தற்போது எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அதை பார்த்தால் எங்களுக்கு கண்ணீர் வருகிறது. எனவே தாம்பரம் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை இணைந்து தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஏரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என கூறினார்.

மாநகராட்சி ஆணையர் பதில்

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ்-ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது, '' தாம்பரம் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் சிறிய நீர்நிலைகளை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சி கீழ் உள்ள ஏரிகளில் 30க்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கீழ் வருகிறது. மேலும், தாம்பரம் மாநகராட்சியில் பொதுபணித் துறையின் கீழ் இருக்கும் பீர்க்கன்காரணை ஏரி, கடப்பேரி, வீரராகவன் ஏரி ஆகிய மூன்றையும் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க உள்ளோம். இதற்காக மாநகராட்சியில் இருந்து 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளோம்.

1,268 கோடி ரூபாய் நிதி கேட்பு

சிட்லபாக்கம் ஏரியை போல இந்த மூன்று ஏரிகளிலும் நடைப்பாதைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் இந்த வருடத்தின் இறுதிக்குள் செய்து முடிக்கப்படும். மேலும், தாம்பரம் மாநகராட்சியின் கீழ் உள்ள அனைத்து ஏரிகளிலும் கழிவுநீர் கலப்பதை தடுக்க 1,268 கோடி ரூபாய் நிதியை அரசிடம் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி அடுத்த மாதம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு பாதாள சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்தி ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை முற்றிலுமாக தடுக்க முடியும்.

ஆகாய தாமரை பெருகி காணப்படும் ஏரி (ETV Bharat Tamil Nadu)

ஏழு ஏரிகளை பாதுகாக்க நடவடிக்கை

மேலும் 2ம் கட்டமாக மாடம்பாக்கம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, சேலையூர் ஏரி, நன்மங்கலம் ஏரி ஆகிய நான்கு ஏரிகளையும் சீரமைக்க தேர்ந்தெடுத்துள்ளோம். பெரிய ஏரிகளை சீரமைத்து பாதுகாக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கையை எடுத்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெற்ற பிறகு கழிவுநீர் கலப்பு என்பது முற்றிலுமாக தடுக்கப்படும். வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த ஏழு பெரிய ஏரிகளையும் தாம்பரம் மாநகராட்சி சீரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

பொதுப்பணித் துறை அதிகாரி

பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, '' தாம்பரம் மாநகராட்சியில் 37 நீர் நிலைகள் பொதுப்பணித் துறையின் கீழ் வருகிறது. திருநீர்மலையில் உள்ள பெரிய ஏரி மற்றும் நாட்டு கால்வாயை சீரமைக்க ரூ.53 கோடி அரசிடம் கேட்டுள்ளோம். அதேபோல, மாடம்பாக்கம் ஏரியை சீரமைக்க ரூ.25.5 கோடி நிதி கேட்டுள்ளோம். நிதி கிடைத்தவுடன் ஏரியை சீரமைக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் ஏரிகளை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சீரமைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். எனவே ஆக்கிரமிப்பு குறைவாக இருக்கும் ஏரிகளை தேர்ந்தெடுத்து சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details