சென்னையில் பயிற்சி முடிந்த 229 ராணுவ வீரர்களின் அணிவகுப்பு சென்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், 229 இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா அணிவகுப்பு நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரண்யாவுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த 11 மாதங்களாக பல்வேறு பயிற்சியில் ஈடுபட்ட 36 பெண்கள், 184 ஆண்கள், உகாண்டா, சிசல்ஸ், மலேசியா, லசாத்தோ ஆகிய நட்பு நாடுகளைச் சேர்ந்த 9 அதிகாரிகள் என மொத்தம் 229 இளம் ராணுவ அதிகாரிகள் மிடுக்கான உடையில் இயந்திர துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியவாறு அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
மேலும் ஜிம்னாஸ்டிக் சாகசம், புகழ்பெற்ற ராணுவ தற்காப்புக் கலையை செய்து காட்டினர். கேரளாவின் புகழ்பெற்ற களறிப்பயட்டு தற்காப்புக் கலையை செய்து காண்பித்தனர். மேலும், மூவர்ண தேசியக்கொடியுடன் பிரமிடு வடிவில் வீரர்கள் பைக்கில் சென்றபடி சாகசம் செய்தனர். பின்னர், குதிரைகள் மீது அமர்ந்தபடியே நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இதனை விமானப்படை தளபதி வி.ஆர்.செளதிரி பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து பயிற்சிகாலத்தில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக ஈடுபட்ட ஆர்யன் ஷாஹிக்கு வீரவாளுடன் வெள்ளிப்பதக்கமும், செளரியன் தாபா வுக்கு தங்கப்பதக்கமும், தமிழகத்தைச் சேர்ந்த சரண்யாவுக்கு வெண்கலப்பதக்கமும் விமானப்படை தளபதி
வி.ஆர்.செளதிரி வழங்கி அவர்களிடம் பேசினார்.
அதனையடுத்து மிடுக்கான உடையில் பயிற்சியின் இறுதியடிடெடுத்து பயிற்சி தளத்தைவிட்டு வெளியேறிய அதிகாரிகளுக்கு மூன்று ஹெலிக்காப்டரில் பூ தூவி வரவேற்றனர். கடுமையான பயிற்சி நிறைவு செய்த இளம் ராணுவ அதிகாரிகள் துப்பாக்கிகளை உயரப்பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் பெற்றோர்கள், உறவினர்களை கட்டிப்பிடித்து மகிழ்ந்தனர். இந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் சென்னை அதிகாரிகள் பயிற்சி மைய தளபதி ராஜேஷ் செளகான் உள்ளிட்ட உயர் ராணுவ, மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:"மகள் இலக்கை நோக்கிப் பயணிக்கப் பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - துப்பாக்கி சுடு வீராங்கனை சுமன் குமாரி!