சென்னை:இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பயில அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடுமுழுவதும் உள்ள 571 நகரங்களில் கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் தேர்வெழுதினர். தற்போது நீட் தேர்வுக்காக தேர்தல் முடிவுகளை தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை exams.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில் 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றுள்ளனர்.