சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான பயணிகளை நிறுத்தி அவர்களுடைய உடைமைகளையும் பரிசோதித்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை அடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
அதன் பின்னர், அந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில், பிளாஸ்டிக் கூடை ஒன்றுக்குள் 2 மலைப்பாம்புகள் மற்றும் மற்றொரு கூடையில் ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்கு ஒன்று இருந்ததையும் கண்டுபிடித்தனர். மேலும் சில வெளிநாட்டு அபூர்வ வகை ஆமைகள், ஆப்பிரிக்க நாட்டு அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் அபூர்வ வகை அணில் உள்ளிட்டவை இருந்தது கண்டறியப்பட்டன.
இதையடுத்து அந்த பயணியை தனி அறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், விரைந்து வந்த அதிகாரிகள் உயிரினங்களை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.