திண்டுக்கல்: வறண்ட வானிலை காரணமாக கொடைக்கானலைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால், பல ஏக்கர் அளவிலான மரங்கள், செடி கொடிகள் எரிந்து நாசமாகி வருவது அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த பல வாரங்களாக வறண்ட சூழல் நிலவி வருகிறது. இந்த வறண்ட வாநிலை காரணமாக, தற்போது மலைப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள், புதர் செடிகள் உள்ளிட்டவை காய்ந்து தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பல்வேறு இடங்களில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு, மரங்கள் பற்றி எரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த தீயினை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மச்சூர், மயிலாடும்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு, பல ஏக்கர் அளவிற்கு மரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.
பெருமாள் மலை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள வருவாய் நிலப்பகுதிகளிலும், தனியார் நிலப் பகுதிகளிலும் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டு பற்றி எரிந்து வருகின்றன. அதேபோல், பழனி சாலைப் பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.
இதையும் படிங்க: கோவையில் சாலையில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் காயம்!