கள்ளக்குறிச்சி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மெலநீலிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி (21) இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில், கஸ்தூரி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் சென்னையில் வசித்து வரும் சூழலில், கஸ்தூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடத்துவதற்கும், தங்களது கிராமத்தில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யவும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆகவே, கஸ்தூரி மற்றும் அவரது கணவர் சுரேஷ்குமார் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று (மே 2) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில், ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாக்கம் என்ற இடத்தை கடக்கும் போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர் பயணித்த ரயில் பெட்டியின் வாசல் பகுதிக்குச் சென்று கதவு ஓரத்தில் நின்றபடி ரயிலுக்கு வெளியே வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கஸ்தூரிக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கஸ்தூரி நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி வெளியே விழுந்துள்ளார். கஸ்தூரி ரயிலில் இருந்து விழுந்ததைக் கண்ட அவரது கணவன் மற்றும் உறவினர்கள் உடனடியாக ரயிலில் உள்ள அவசரக்கால சங்கிலியை இழுக்க முயன்றுள்ளனர். ஆனால், அது வேலை செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், பக்கத்துப் பெட்டியில் உள்ள அவசரக்கால சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் அதற்குள், ரயில் சில கி.மீ தொலைவு கடந்துள்ளது. இதனை அடுத்து, கஸ்தூரியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் ரயிலில் இருந்து கீழே இறங்கி கஸ்தூரியை தேடியுள்ளனர். ஆனால் கஸ்தூரி அங்கு கிடைக்காத நிலையில், கஸ்தூரியை கண்டுபிடித்துத் தருமாறு ரயில்வே போலீசாரிடம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.