சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யும் நிலையில், விசாரணையை முடக்கும் நோக்கத்தில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.