சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் சமீப நாட்களாக திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது. திமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அந்த விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினரான பின்னர் ஒரு ஆண்டு கழித்து இளைஞர் நலன்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் பின்னர், இப்போது துணை முதல்வராக உதயநிதி பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், உதயநிதி சந்திக்க உள்ள சவால்கள் என்ன? மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு தரப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் திமுகவின் கட்டமைப்பை வழிநடத்துவதற்கும், அதே நேரத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற அம்சத்துடன் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கம் துறை & வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் கிராமப்புற கடன் மற்றும் திட்டமிடல் மற்றும் மேம்பாடு துறை ஆகியவற்றின் பொறுப்புகளை கவனிக்கின்றார். அவருக்கு ஒதுக்கப்பட்டு துறைகள் இளைஞர்கள், மகளிர், ஏழைகள் நலன் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இன்றைக்கு வாக்கு வங்கி அரசியலும் இவர்களை சுற்றியே இருக்கிறது.
செயல்பாடுகள் மூலமே பதில்:உதயநிதி ஸ்டாலின் துறையின் மூலமாகத்தான் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளும் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் துறையின் மூலமே செயல்படுத்தப்படுகின்றன. சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் மூலம் மாவட்டம் தோறும் திறன் மையங்கள் அமைத்தல், நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற துறைசார்ந்த செயல்பாடுகளில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன்பு கடந்த 29ஆம் தேதி காலை செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "துணை முதல்வர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்," என்று கூறியிருந்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில் இன்னும் இரண்டு மாதத்தில் இரண்டு ஆண்டுகளை அவர் நிறைவு செய்ய உள்ளார். இதுவரையிலும் அவரது துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து எந்தவித விமர்சனங்களும் எழுந்ததில்லை. குறிப்பாக மகளிர் உரிமை திட்டத்தை அனைத்து மகளிருக்கும் செயல்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார். மற்றபடி உதய நிதி மீது இதுவரை துறைரீதியான அதிருப்திகள் எழவில்லை. இதுவரை தமது துறையின் செயல்பாடுகளை விமர்சனத்துக்கு இடமின்றி முன்னெடுத்தது போலவே இனி வரும் நாட்களிலும் அவர் முன்னெடுத்துச் செல்வார் என்று நம்பலாம்.
துணை முதலமைச்சர் பதவியில் என்ன சாதிக்க முடியும்?:துணைமுதலமைச்சர் என்ற பதவி என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. அதே நேரத்தில் சட்டப்படி தவறும் அல்ல என்று கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கட்சியில் உள்ள தலைவர்களை திருப்தி படுத்த அல்லது கூட்டணி கட்சிகளை திருப்தி படுத்தவே துணை முதலமைச்சர் பதவி மாநில அரசுகளால் உருவாக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. எனவே துணை முதலமைச்சர் பதவி என்பது கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதல்ல. அமைச்சருக்கான பொறுப்புகளை மட்டுமே வகிக்க முடியும்.
இதையும் படிங்க :திராவிட மண்ணில் "தமிழ் தேசிய சித்தாந்தம்" பேசும் விஜய்!
முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போதும் அல்லது உடல்நலக்குறைவின் போது ஓய்வில் இருக்கும்போது முதலமைச்சரின் துறைகளை துணை முதலமைச்சர் கவனிப்பார். அதே போல முதலமைச்சர் மாநிலத்தில் இல்லாத சமயத்தில் அவரது உத்தரவின் பேரில் துணை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தலாம், பிற அமைச்சர்கள் துறைகள் தொடர்பாக ஆலோசனைகள் உத்தரவுளையும் துணை முதலமைச்சர் பிறப்பிக்க முடியும்.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படும் முன்பு அமைச்சர்களிடமும், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்த பிறகே அவரை நியமித்திருக்கிறார். எனவே, துணை முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமது துறைக்கு அப்பாற்பட்டு பிற துறைகளில் முடிவுகள் எடுப்பதற்கு ஆலோசனைகள் கூறும் போது எந்த ஒரு சவாலையும் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமே சவால்:2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் இதுவரை எந்த ஒரு நேரடி ஆலோசனையிலும் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டதில்லை என்பதால் இந்த விஷயத்தில் உதயநிதிக்கு கூட்டணி கட்சிகள் வாயிலாக அதிருப்திகள் எழலாம்.
எதிர்முகாமில் அதிமுகவை தவிர புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக இருப்பார். தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும்போது திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று திமுக இளைஞரணியினர் எதிர்பார்ப்பது என்பது இயல்பான ஒன்று. இப்படியான ஒரு தருணத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கடுமையான சவாலை சந்திக்க நேரிடும்.
விஜயின் தவெகவில் இளைஞர்கள் ஆதிக்கம் உள்ள நிலையில்தான் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் விஜயின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும் சூழலில் உதயநிதிக்கான பொறுப்புகள் என்ன என்பது அவரது இளைஞரணியிடம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உதயநிதிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் உள்ளது.