சென்னை:மல்லிகார்ஜுன கார்கே 295க்கு மேல் என்று சொன்னாரே. அது வரலையே என்று கேட்க முடியுமா? இப்போதும் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. பல மாநிலங்களில் ஓட்டு விகிதம் மாறி இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நாடாளுமன்றத்தில் ஹாட்ரிக் வர முடியாது. நேருவுக்குப் பிறகு 3வது முறையாக யாரும் வந்ததில்லை என்று சொன்ன போது, 3வது முறையாக மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.
மேலும் இரண்டு மாநிலத்தில் புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருகிறது. ஒடிசாவில் தனியாக பாஜக போட்டியிட்டு அங்கு 21-க்கு 18-இல் முன்னிலை. பெரும்பான்மை தாண்டி பாஜக மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதே மாதிரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. சிக்கிமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு தேர்தல் நடந்த 4 மாநிலங்களிலும் ஒன்று பாஜக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆகவே, இந்த மாநிலத்தில் சீட்டுகள் குறைவு, அந்த மாநிலத்தில் அதிகம் என்பது இருக்கத்தான் செய்யும். தென் மாநிலங்களில் பாஜக இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் 4ல் 3 பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் பாஜக தான் முதல் கட்சியாக வெற்றி பெற்று இருக்கிறது.
மக்களின் நல் ஆதரவும் பாஜக கட்சிக்கு கிடைத்திருக்கிறது. முழு தேர்தல் பரிமாணங்கள் இனிமேல் தான் வரும். அதனால் மாநில வாரியாக வாக்குகள் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் முன்னணியில் இருக்கிறது என்று தகவல் வந்தது. இதை தோல்வி என்று எப்படி சொல்ல முடியும்? இது ஏற்கனவே நாம் முயற்சி செய்தது. 2014ல் இதே மாதிரி கூட்டணி, தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத 3வது அணி பாஜக அமைத்தது.
ஆனால், இப்போது 12 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் 3வது நிலையான அரசியல் கட்சியாக பாஜக வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்தபடி எண்ணிக்கை வராமல் இருக்கலாம். ஆனால், 3வது நிலையான கட்சியாக உருவாக்கி இருக்கிறோம். 2026ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக களத்தில் நன்றாக விளையாடும்” என்றார்.