ஈரோடு: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பவானிசாகர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்கள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நீலகிரி எம்.பி ஆ. ராசா அடிக்கல் நாட்டினார். அதேபோல் முடிவு பெற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ. ராசா போட்டியிட்டால் நிச்சம் டெபாசிட்டை இழப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.பி ஆ. ராசா, "செங்கோட்டையனா? அப்படினா யார்னு தெரியலையே" எனச் செய்தியாளர்களிடமும், அருகே இருந்த கட்சிக்காரர்களிடமும் அவரை குறித்துக் கேட்டுக் கிண்டலாகக் கேள்விக்குப் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்துவோம். அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம். திமுக-வின் நல்லாட்சிக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்போம். இது தான் திமுகவின் பிரச்சார வியூகம். நாடாளுமன்றத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியைத் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு ஏன் வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பினேன்.