தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“காங்கிரஸ் முற்றுகை தேதியை அறிவித்தால் வசதியாக இருக்கும்”.. செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில்! - Annamalai on Congress protest - ANNAMALAI ON CONGRESS PROTEST

BJP Annamalai: பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பிற்கு, முற்றுகை தேதியை முன்பே அறிவித்தால் வரும் பத்து பேருக்கும் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை, அண்ணாமலை புகைப்படம்
செல்வப்பெருந்தகை, அண்ணாமலை புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 5:03 PM IST

Updated : May 22, 2024, 5:43 PM IST

செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “ஒடிசாவில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில், பிரதமர் மோடி தமிழர்களை திருடர்கள் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழர்களை ஒடிசாவை ஆள நினைக்கலாமா என்றும் கூறியுள்ளனர். தேர்தல் பரப்புரையில் மக்கள் சட்டம் 151-ஐ தொடர்ந்து மீறி வருகின்றனர்.

அநாகரிகமான அரசியலை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. வெறுப்பு, மத, சாதி அரசியலை பிரதமர் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்குச் சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசுகிறார். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தைப் பற்றி பிரதமர் மோடி பேசுவார். அவர் பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பாஜக தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்.

தேர்தல் ஆணையம் கும்பகர்ணன் போன்று தூங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் எப்போது விழித்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உடன் தற்போது தேர்தல் ஆணையமும் இணைந்து பிரதமர் மோடி கூட்டணியில் பணியாற்றி வருகிறது. அதனால் தான் பிரதமர் மோடி எதை பேசினாலும் தேர்தல் ஆணையம் அதனை கண்டு கொள்ளவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மொழியின் வரலாற்றை சாதாரண மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி ஏன் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை? உலகத்திலேயே இப்படி ஒரு இழிவான பிரதமரை உலகம் கண்டதில்லை. பிரதமர் மோடி பேசியதற்கு பாஜகவினர் ஒரு கண்டனம் தெரிவித்தார்களா? இதிலிருந்து பாசிச பாஜகவின் நிலை தெரிகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கும் போக முடியாத அளவிற்கு நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை எட்டப்பன் வேடமிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியை பற்றி உண்மையை கூறியுள்ளார். பாஜகவினரும் ராகுல் காந்தி புகழ்ந்து பேசி வருகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளார். அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

மேலும், போராட்டத்திற்கு வரும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். மேலும், அன்றைய தினம் திமுகவும், காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். எனவே, முற்றுகை போராட்ட தேதியை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்.. பின்னணி என்ன? - Justice R Mahadevan

Last Updated : May 22, 2024, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details