சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "கேரள மாநிலம், வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்துள்ளோம்.
கடந்த முறை வயநாடு தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இம்முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பாசிச சக்திகளை ஒழிக்க வயநாட்டிலிருந்து ஒரு தீப்பொறி கிளம்பி இருக்கிறது.
தோல்வி அச்சத்தில், பிரதமர் என்கிற தகுதியை மீறி மிகவும் கீழ்த்தரமாக மக்கள் ஏற்றுக்கொள்ளாத வகையில் பாசிசவாதியாக தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காந்தி இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தபோது, இந்த மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது. எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகள் எனக் கூறினார்.
ஆனால், பிரதமர் மோடி மக்களைப் பிரித்தாலும் கொள்கையில் இறங்கியுள்ளார். நாங்கள் கூட இந்துதான். ஆனால், அவர் கூறுவதை ரசிக்கவில்லை, எதிர்க்கிறோம். இப்படிப்பட்ட பாசிச சக்திகளை நாம் புறந்தள்ள வேண்டும் என தேசத்தின் மக்கள் எல்லாம் முடிவு செய்துள்ளார்கள். மிகப்பெரிய தோல்வி பயத்தில் பாஜக உள்ளது.
100 இடங்களுக்கு மேல் கூட பாஜக வெற்றி பெறாது என வடநாடு பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டுள்ளனர். தோல்வி பயத்தில், மக்களிடையே மோதலை உருவாக்க பிரதமர் மோடி இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுகளைப் பேசி வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.