சென்னை:இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், அண்ணா சாலை வெலிங்டன் பிளாசா அருகில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த அமைதி ஊர்வலத்தில் மன்மோகன் சிங் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டா வாகனத்தில் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவன் ராஜீவ்காந்தி உள் அரங்கத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்குபெறும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு புகழஞ்சலி செலுத்தினர். முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பொருளாதாரத்தில் சீரழிவு:
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, "சென்னையைப் பார்க்கும் போது விமான நிலையத்திலிருந்து கடற்கரை செல்லும் வரை சென்னை மாநகரம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அது மன்மோகன் சிங் காலத்தில், அவர் கொடுத்த திட்டத்தால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது என அவரது பெருமைகளையும் திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்று தீர்க்கதரிசனமாக அவர் சொன்னது தான் இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. Demonetization என்பது மிகப்பெரிய பொருளாதார பேரிடர் / Economic Disaster என்று ஆவேசமாக சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மை என இன்று பார்க்கிறோம். பலர் பதவியை தேடி அலைவார்கள் ஆனால் பதவி அவரை தேடி வந்தது என்று திருநாவுக்கரசர் சொன்னதை சுட்டிக் காட்டி பேசினார்.
மேலும், நன்றி என்ற வார்த்தைக்கு பொருத்தமான உரிதர் அரசியலில் உண்டு என்றால் அது மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. காரணம் தன் மீது நம்பிக்கை வைத்து பெரிய பதவியை ஒப்படைத்த தலைவிக்கு காலம் முழுவதும் விசுவாசமாக இருந்து மறைந்த அவரை எல்லா அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
ரூபாய் நோட்டில் கையெழுத்திட்ட ஒரே பிரதமர்:
நிகழ்ச்சி மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, "மன்மோகன் சிங் தனக்காக எந்த பதவியும் கேட்டுப் பெற்றதில்லை. அவர் வகித்த பதவி அவர் திறமைக்கு கிடைத்தது. அவர் நிதியமைச்சராக இருந்தபோது இந்திய நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாடுபட்டவர். அப்படிப்பட்ட தலைவர் இந்த தேசத்தில் மிகவும் அரிது.
மேலும், உங்களை விட உயர்ந்த பிரதமரைப் பார்க்க முடியாது என்று ராகுல் காந்தி சொன்னதாக நினைவு கூர்ந்தவர், இப்படிப்பட்ட தலைவரை இழந்தது காங்கிரஸ் இயக்கம் என உருக்கமாகத் தெரிவித்த அவர், எவ்வளவு பேர் பிரதமராக இருந்தாலும், ரூபாய் நோட்டில் கையெழுத்திட்ட ஒரே பிரதமர் மன்மோகன் சிங் தான் எனவும், அவர் தேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டவர் எனவும் புகழாரம் சூட்டினார்.