சென்னை:தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், மகளிர் காங்கிரஸ் ஸ்தாபன நாள் விழா மற்றும் இணைய வழி மகளிர் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் 'அரசியலில் பெண்களின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஷாபர், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, செய்தி வாசிப்பாளர் உமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மகளிர் காங்கிரஸ் ஸ்தாபன நாள் விழாவை முன்னிட்டு, இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், கேக் வெட்டியும் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் பேரியக்கத்தின் மகிளா காங்கிரஸ் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்து, தற்போது 41ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
நாடு முழுவதும் ஆண்களுக்கு சரி நிகராக பெண்கள் இருக்க வேண்டும். அரசியல் அதிகாரத்திலும் சரிநிகராக இருக்க வேண்டும். அதற்கான அனைத்து வாய்ப்புகளும் தரப்பட வேண்டும். நாட்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் பெண்கள் போராட்டத்தில் கலந்து போராட தயாராக இருக்கின்றனர். பிரதமர் மோடி ஒவ்வொரு சுதந்திர தின உரையிலும் பெண் பாதுகாப்பு பேசுவார். ஆனால், மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்த போது ஒரு முறை கூட சென்று பார்க்கவில்லை.