சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான சத்தியமூர்த்தியின் 137வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள தீரர் சத்தியமூர்த்தியின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அமைந்துள்ள சத்தியமூர்த்தியின் திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "நூற்றாண்டு விழா காணும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடுவது என்பது அரசு நிகழ்ச்சி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் உள்ளிட்டோர் அதனை வரவேற்றுள்ளனர். இதில் காங்கிரஸுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. கருணாநிதி ஒரு வரலாறு. அவரை அங்கீகரிப்பவர்களை, புகழ் பாடுபவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் அங்கீகரிக்கும்.
காமராஜருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பல திட்டங்களை மக்களுக்காகச் செயல்படுத்தியவர் கருணாநிதி. தமிழ்நாடு மக்களுக்காக உண்மையாக இருந்தவர் கருணாநிதி. தமிழ்நாடு மக்கள் உள்ளவரை கருணாநிதியின் புகழை யாரும் மறைக்க முடியாது. அதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கருணாநிதியை யார் வாழ்த்தினாலும் மகிழ்ச்சியடைவோம்.
அதிமுக ஆட்சியில் பாஜக உடன் நட்பு பாராட்டிய போது, தமிழக உரிமைகள் அடமானமாக வைக்கப்பட்டதாக விமர்சித்த திமுக மற்றும் அதன் கூட்டணி, இப்போது பாஜக உடன் திமுக நட்பு பாராட்டும் போது அதனை அரசியல் நாகரிகம் என சொல்வது அரசியலுக்காகவா? என்ற கேள்விக்கு, உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை அதிமுக அனுமதித்தது. தமிழ்நாட்டின் நலனை விட்டுக்கொடுத்து, பின்னுக்குத் தள்ளி மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திடவில்லை.