விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜுன் 18-ஆம் தேதி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த 3-ஆம் கட்ட அகழ்வாய்வு பணியின் போது சுடு மண்ணாலான வடிதட்டு (சல்லடை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சூடு மண்ணால் ஆன புகைப்பிடிப்பான் கருவி மற்றும் சுடுமண் குழாய், சங்கு வளையல்கள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல் நாயக்கர் கால செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில், புழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும், பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகை நாணயங்களில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த நாணயத்தில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுகிறது.
இதற்கு முன்னதாக மாவு கல்லால் ஆன, கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும், தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது. இத்தொங்கணி மாவு கல்லினால் செய்யப்பட்டுள்ளது. இதனின் தலைப்பகுதியில் அணிகலனுடன் கோர்ப்பதற்கான துளையிடப்பட்டுள்ளது. இந்த சிறிய அணிகலன் 14.6 மி.மீட்டர் நீளமும், 4.2 மி.மீட்டர் சுற்றளவும் 30 மி.கிராம் எடை கொண்ட பச்சை நிறத்தில் கூம்பு வடிவிலான சிறிய அணிகலனாகும்.
இதையும் படிங்க:வெம்பக்கோட்டை அகழ்வாய்வு; சுடு மண்ணாலான விதவிதமான கலைப் பொருட்கள் கண்டெடுப்பு!