பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸின் கருத்து மோதல் குறித்து '' சின்னா மாங்கா, பெரிய மங்கா '' என விமர்சனம் செய்த அமைச்சர் தா.மோ. அன்பரசனை சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணை அவசியம். குற்றவாளி பின்னணி, முன்னுக்கு பின் முரணாக உள்ளது. சரியான, நேர்மையான ஒரு அமைப்பு இதனை விசாரிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரிப்பதை நான் வரவேற்கிறேன். அப்போது தான் உண்மை தெரியும்.
இதையும் படிங்க:"பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன்" - தவெக விஜய் கைப்பட கடிதம்!
மேலும், கைது செய்யப்பட்டவர் திமுகவை சேர்ந்த நபர்தான். கைதான ஞானசேகரன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோருடன் உள்ள படங்கள் வெளியாகியுள்ளது. கட்சி போஸ்ட்டர்களிலேயே அவரது பெயரை பார்க்க முடிகிறது. அவர் எந்த கட்சியை சேர்ந்தவர், அல்லாதவராக இருந்தாலும் அது முக்கியமில்லை. அந்த செயல் குற்றம். இனி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்'' என்றார்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து முரண்பாடு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், "அது சின்ன மாங்கா, பெரிய மாங்கா பிரச்சனை " என கேலி செய்ததை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சீமான், '' அவர்கள் கட்சியில் (திமுக) எந்த உட்கட்சி பிரச்னையும் வந்தது இல்லையா? ஸ்டாலின், அழகிரி ஆகியோருக்கு பிரச்சனையே இருந்தது இல்லையா? முதல் நாள் பிரச்னை அடுத்த நாள் சரியாகி விட்டது. அவர்கள் பிரச்சனையால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏதாவது பாதிப்பு உண்டா? அதற்காக, சின்ன மாங்கா, பெரிய மாங்கா என கேலி செய்வது மதிப்பு மிக்க தலைவர்கள் பேசுவதற்கு அழகு அல்ல'' என இவ்வாறு சீமான் கூறினார்.