காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் ஆதிபராசக்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் (39). இவரது மனைவி மீனா (36). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் தோனி என்ற மகனும் உள்ளனர். தோனி, படப்பை ஆத்தனஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிறுவன் சரியாக படிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சம்பவத்தன்று சிறுவன் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
பெற்றோர் தோனியை கண்டித்ததோடு ''ஒரு நாள் மட்டும் லீவு எடுத்துக்கொள். ஆனால், நாளை முதல் ஒழுங்காக பள்ளிக்குச் செல்ல வேண்டும்'' எனக் கூறியதுடன், ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வைக்கச் சொல்லி காசு கொடுத்துவிட்டு இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, சிறுவன் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் சிறுவன் உடலில் தீ பற்றியபடி அலறிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போர்வையால் சிறுவனை மூடி தீயை அணைத்துள்ளனர்.
பின்னர் 90 சதவீத தீக்காயங்களுடன் சிறுவனை ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்குச் சென்ற பின்னர், சிறுவன் ரேஷன் பொருட்களை வாங்கிவந்து வீட்டில் வைத்துள்ளார். பின்னர், படப்பை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து அச்சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், போலீசார் சிறுவன் தற்கொலை செய்வதற்கு முன்பாக அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தவாறு வாட்டர் கேனில் சிறுவன் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, அங்கிருந்து வீட்டிற்குச் சென்றது தெரியவந்தது. மேலும், பெட்ரோல் வாங்குவதற்கு யாருடன் சென்றார், இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் யார்? தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் கறார் காட்டிய குஷ்பூ.. 'மெத்தனால் இருந்த ஆதாரம் எங்கே'.. கேள்விகளை அடுக்கிய கமிஷன்!