சென்னை:சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில சாரண சாரணியர் தலைமை அலுவலகத்தில் 75வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், "அற்புதமான முறையில் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறை சாற்றும் வகையில் நடனங்கள் ஆடிய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள துறைகளில், நான் அதிக மகிழ்ச்சியோடு செயலாற்றக் கூடிய துறையின் பிரிவு சாரண சாரணியர் பிரிவுதான். ஜம்புரி(பேரணி) என்ற நிகழ்வைக் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பான முறையில் மற்ற மாநிலங்கள் பெருமைப் படும் அளவுக்கு நடத்த உள்ளோம். மனித இனம் எப்படி இருக்க வேண்டும், இயற்கையை எப்படிப் பாதுகாக்க வேண்டும், விலங்குகள் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என அனைத்தும் கற்றுக் கொடுக்கும் இயக்கம் தான் இது.