திருச்சி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், குற்றாலத்தில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது.
தென்காசியில் கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு நேற்று (வியாழன்) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பு வாதங்கள் மற்றும் சாட்டை முருகன் தரப்பு வாதங்களை கேட்டறிந்த திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன், சாட்டை துரைமுருகனை விடுவித்தார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சாட்டை துரைமுருகன், “என் மீது 11 வழக்குகள் போட்டு இந்த அரசு முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் இது அப்பட்டமான பொய் வழக்கு எனவும், நாங்கள் 14 ஆண்டு காலமாக பட்டியலின மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்கிறோம் எனவும், என் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தை போட்டு அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன் வைத்தோம். இது சட்டத்திற்கு புறம்பான வழக்கு, நான் பாடிய பாடல் என்பது அதிமுக 31 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரங்களில் பாடக்கூடிய பாடலாகும்.
அதை நான் மேற்கோள் காட்டினேன், குறிப்பாக பட்டியல் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறியது அப்பட்டமான பொய், நானே சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளேன், என் பிள்ளைகளுக்கு இதுவரை சாதி சொல்லாமல் 'தமிழர்' என்று சொல்லி வளர்த்து வருகிறேன்.