தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் 14வது நாளாக போராட்டம்..10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு!

Sankarankovil Protest: சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்கள் 50 சதவீத ஊதிய உயர்வு கோரி 14வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

sankarankovil power loom workers Protest
சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 8:53 AM IST

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் மௌன ஊர்வலம்

தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5,000-க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 50 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும், விடுமுறை நாளன்று ரூ.500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 27ஆம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.

14வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் நேற்று (மார்ச் 10) மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகள் குறித்து பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த ஊர்வலமானது கீதாலயா தியேட்டர், ராஜபாளையம் சாலை மற்றும் திருவேங்கடம் சாலை வழியாகச் சென்று பாடாப்பிள்ளையார் வரை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். தொடர்ந்து 14வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு விசைத்தறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும்; ஆனால், இன்றுவரை அந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தவில்லை எனத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து சிஐடியு மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி கூறுகையில்,"சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள், 50 சதவீத ஊதிய உயர்வு கேட்டு 14வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு இந்த போராட்டத்திற்கு தீர்வுக்கான மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் தொடர்ச்சியாகப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கிறோம். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் கவனத்தில் கொண்டு, தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். உடனடியாக உரிமையாளர் சங்கத்தை அழைத்து சுமூக தீர்வுக்கு வர வேண்டும்"என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:ஆஸ்கார் விருது எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது.. அதன் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details