ஓய்வூதியம் பெற இடைத்தரகர்கள் மூலம் ஆவணங்களைக் கொண்டு வர அதிகாரிகள் வலியுறுத்தல்..பாதிக்கப்பட்டோர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு! கோயம்புத்தூர்: கோவையில் வழக்கறிஞராக இருப்பவர் புகழேந்தி. இவரது தந்தை இளங்கோவன் மற்றும் தாயார் அல்லி ஆகியோர் கோவை மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றிக் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடையை அளிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தாயாருடன் மாநகராட்சி அலுவலகத்தில் புகழேந்தி புகார் அளித்தார்.
இதுகுறித்து புகழேந்தி கூறுகையில், "தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கோவை மாநகராட்சி 82வது வார்டில் நிரந்தர தூய்மை பணியாளர்களாகக் கடந்த 30 வருடங்கள் பணியாற்றி, கடந்த ஆண்டு ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக் கொடை மற்றும் ஓய்வூதியத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இது குறித்து கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் கிரிஜா என்பவரை அணுகிய போது, இந்த வேலைகள் தங்களுக்குத் தெரியாது எனக் கூறி, இடைத்தரகர்கள் மூலம் அதற்கான பணிகளை முடித்துவிட்டு ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மேற்கொண்டு பணிகளைச் செய்வோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த பணிகளைச் செய்ய ரூ.20 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் அலட்சியமாகக் கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரியான மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில் குமரனிடம் தெரிவிக்கச் சென்றால், தங்களை நீண்ட நேரமாகக் காக்க வைத்தது மட்டுமில்லாமல், தங்களைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார் என்று குற்றம் சாட்டினார்.
எனவே, மாநகராட்சி ஆணையாளர் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடையை விரைந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாகச் செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கிரிஜா மற்றும் செந்தில் குமரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் இடைத்தரகர்கள் மூலம் செல்லும் பொழுது அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட தொகை செல்வதாகவும் கூறினார்.
கோவை மாநகராட்சியில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் பலரும் ஓய்வூதியம் கிடைக்காமல் பல நாட்களாகப் போராடி வரும் நிலையில், அதற்கான பணிகளைச் செய்ய வேண்டிய அதிகாரிகளே அவர்களது பணிகளைச் செய்யாமல் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து இடைத்தரகர்கள் மூலம் வருமாறு கூறுவது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கண்டனத்திற்குரியது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்.. பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி