சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி பொதுப்பணிகள் துறை அமைச்சர், சிறு, குறு, நடுத்த ரதொழில்கள் துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள். இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையும் படிங்க:சாம்சங் தொழிலாளர் பிரச்னையை ஊதி பெரிதாக்குவதா? சிஐடியு.க்கு திமுக தொழிற்சங்கம் கடும் கண்டனம்!
1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொதுகோரிக்கையின் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு,வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.
இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
முதல்வரின் நன்றியும், பாராட்டும்:இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்தியாவிலேயே தொழில் அமைதிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் தமிழ்நாடு தொடர்ந்து அந்த நற்பெயரை நிச்சயம் தக்கவைக்கும். அதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். தொழிலாளர் நலன் காக்கவேண்டும், தொழில்வளம் பெருகவேண்டும் என்ற இரண்டு நோக்கங்களை தனது இரண்டு கண்களாகப் பாவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்.
இந்த பிரச்சனை நடந்துகொண்டிருந்த ஒருமாத காலத்தில் பல்வேறு அமைப்புகள் பல தேவையற்ற கருத்துகளை முன்வைத்து இதனை அரசியலாக்கக் காத்திருந்த நிலையிலும்,, முதலமைச்சரின் அறிவுரையின்படி அதற்கெல்லாம் பதில் சொல்வதைத் தவிர்த்து, பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வழியினை மட்டுமே ஆராய்ந்து அதனை தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றிக் காட்டியுள்ளது.
தமிழ்நாடு தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்; தொழிலாளர் நலன் காண தொடர்ந்து உறுதுணையாய் நிற்கும்!
இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து தொழிலாளர்களுக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார். மேலும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி இதனை நல்ல முடிவுக்கு கொண்டுவர சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன், .டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் பாராட்டுகளையும் நன்றியினையும் முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.