தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் உடல்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்! - Salem suitcase murder case - SALEM SUITCASE MURDER CASE

சங்ககிரி அருகே சூட்கேஸில் இளம்பெண் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 18 வயதான அந்த இளம்பெண்ணை லாட்ஜில் வைத்து சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இளம்பெண் சடலம் கிடந்த சூட்கேஸ், சங்ககிரி காவல் நிலையம்
இளம்பெண் சடலம் கிடந்த சூட்கேஸ், சங்ககிரி காவல் நிலையம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 12:51 PM IST

சேலம்:சங்ககிரி அருகே சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 30-ஆம் தேதி சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் வழக்கில் போலீசாரி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வைகுந்தம் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையோரம் உள்ள தரைமட்ட பாலத்தில் பெரிய அளவிலான டிராவல் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. துர்நாற்றம் வீசியதால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல் மற்றும் சங்ககிரி காவல் நிலைய போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரது சடலம் கிடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் யார்?: போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காவல்துறையினர் அளித்த தகவலின்படி, "சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 18 வயது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரு கைகளிலும் தலா ஆறு விரல்கள் உள்ளன. உடலை சுற்ற பயன்படுத்தியது லாட்ஜில் பயன்படுத்தப்படும் போர்வை, பெண் நிர்வாணமாக இருந்ததால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே முழுமையான விபரம் தெரியவரும்" என்று போலீசார் கூறியுள்ளனர்.

சூட்கேஸ் வாங்கியது எங்கே?:இளம்பெண் உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் யூஎஸ்ஏ(USA) என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விற்பனையகம் பெங்களூரு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. புதிய சூட்கேஸ் என்பதால் ஷோரூம்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தனிப்படை தீவிரம்:இளம்பெண் கொலை சம்பவம் தொடர்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சங்ககிரி சுங்கச்சாவடி, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details