சென்னை: சேலம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பணியாளர்கள் முன் வைத்தனர். குறிப்பாக, தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதிகளை மோசடி செய்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் கருப்பூர் காவல்துறையினரால் ஜெகநாதன் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, துணைவேந்தர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்படாமல் துணை வேந்தராகவே தொடர்ந்தார். இதனையடுத்து, அவர் மீது தொடர்ந்து நிதி முறைகேடு புகார்கள் எழுந்து வந்ததால், ஜெகநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.