சேலம்: யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனைத்திந்திய கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து இந்திய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யலாம் என்பதை ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள சென்னை தமிழ்ப் பல்கலை, மதுரை காமராசர், அண்ணாமலை, அண்ணா ஆகிய பல்கலைக் கழக துணை வேந்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், அதுவரை பதிவாளர் தேர்வாணையர் பணிக்கு நேர்காணல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சேலம்
பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது உயர் நீதிமன்றம் விசாரணை நடத்திக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்து விசாரணை நடந்து வருவதால், விரைவில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆசிரியர் பணி மேம்பாடு தொடர்பாக விண்ணப்பம் கூறாய்வு செய்வதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. ஆங்கிலத்துறை ஆசிரியர் கூறாய்வில் தகுதி இல்லை என்று அறிவித்து இரண்டே நாளில் மீண்டும் கூறாய்வு நடத்தி தகுதி பெற்றதாக கூறியதில், சந்தேகம் உள்ளதாக கருதுவதாலும், கல்வியியல் துறை ஆசிரியருக்கு கூறாய்வே செய்யாமல் அவர் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக தெரிவித்துள்ளது.