மதுரை: தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு, நெல்லை மாணவர் சின்னதுரை மீதான வன்கொடுமை தாக்குதல், கிருஷ்ணகிரி அருகே சாதி பெயரை கூறி அபராதம் விதிப்பு உள்ளிட்ட சம்பவம் நடந்துகொண்டே இருப்பது, கல்வி அறிவில் முன்னேறிய மாநிலமாக திகழும் தமிழகத்தில் ஓர் கரும்புள்ளியாகவே திகழ்கின்றன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தமிழக காவல்துறையின் ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் ஆர்டிஐ மூலம் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அதில், தமிழகம் முழுவதும் கடந்த 2016-17 நிதியாண்டு முதல் 2023-24 வரையில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் சாதிய தீண்டாமை ஒழிப்பதற்காக தங்கள் துறையால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்ற எண்ணிக்கை விபரங்கள், சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று தங்கள் துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மாவட்ட வாரியாக வேண்டுமென எழுப்பி உள்ளார்.
இதற்கு ADGP சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பதிலளித்துள்ளது. அதில், தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் டாப் 10 பட்டியலில் 45 எண்ணிக்கையுடன் மதுரை முதலிடத்தில் இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை : கடந்த 2024 மார்ச் மாதம் நிலவரப்படி, தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைப்பிடிக்கப்படும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 394. இதில், அதிகபட்சமாக முதலிடத்தில் மதுரை மாவட்டத்தில் 45ம், 2வது திருநெல்வேலியில் 29ம், 3வது திருச்சியில் 24ம், 4வது தஞ்சாவூரில் 22ம், 5வது தேனியில் 20ம் என்கிற வரிசையில் இடங்களை பிடித்துள்ளன. கடைசியாக 38வது இடத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒரே ஒரு கிராமம் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்ற எண்ணிக்கை விபரங்கள் : கடந்த 2021இல் 597 கூட்டங்களும், 2022இல் 988 கூட்டங்களும், 2023இல் 3,221 கூட்டங்களும், 2024 மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 1,861 கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 13வது இடத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெறும் 11 நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் மொத்தம் 534 எண்ணிக்கையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.