மதுரை:ரயில் நிலையங்களில் குறிப்பாக ரயில் பெட்டிகளில் புகை பிடிக்க தடை உள்ள நிலையில், நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலில் டிசம்பர் 22ஆம் தேதி புகைபிடித்த நபரை கைது செய்ய சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்களில் தீ விபத்தை தவிர்க்க ரயில் பெட்டி மற்றும் கழிவறைகளில் சிறப்பு புகை நுகர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி அன்று நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்-20628) திண்டுக்கல் அருகே சென்ற போது, உயர் வகுப்பு இருக்கை பெட்டியில் புகை நுகர்வு கருவியின் எச்சரிக்கை ஒலி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் ரயில் வடமதுரை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
பயணிகள் யாரோ ஒருவர் புகை பிடித்ததால் இந்தக் கருவி எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புகைப்பிடித்த பயணியைக் கண்டுபிடிக்க இயலாததால், ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதனை அடுத்து புகைப் பிடித்த நபரைக் கண்டறிய ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
தீ விபத்தை தவிர்க்க ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி புகைப்பிடிப்பவர்கள் மீது ரயில்வே சட்டப் பிரிவுகள் 145 B மற்றும் 167 ஆகியவற்றின் கீழ் கடும் அபராதம் விதிக்கப்படும். எனவே சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வந்தே பாரத் ரயிலில் புகை பிடித்தவரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை தீவிரமாக முயற்சித்து வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.