சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 நபர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபர்களில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் 24வது நபராக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரனை செம்பியம் தனிப்படை போலீசார் சிறையில் வைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், ரவுடி நாகேந்திரன் காவல்துறையினரின் கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில், அஸ்வத்தாமனுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும், அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டினாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதில், நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமன் இருவரும் கூறிய பதில்கள் ஒரே மாதிரியாக உள்ளதா? என காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.