புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி, இன்று புதுச்சேரியில் காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, வழுதாவூர் சாலை, விழுப்புரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு கடைகள் உட்பட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
இதே போன்று பெரிய மீன் மார்க்கெட், சின்ன மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு மீன் அங்காடி சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக ஆட்டோ, டெம்போக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் முழுவதும் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகள் ஒரு சில மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் அரசுப் பேருந்துகள் மாநில எல்லையான கன்னி கோவில், மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம் மற்றும் கோரிமேடு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டுச் செல்கிறது.