தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சிட் பண்ட் மோசடி.. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு! - கிளை அலுவலகங்கள்

Chit Fund Fraud in Chennai: காட்டுப்பாக்கத்தில் இயங்கி வந்த சீட்டு நிறுவனம் முதலீடு செய்தவர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

roadblock protest against the chit fund company for defrauding the invested money
முதலீடு செய்த பணத்தை ஏமாற்றியதாக சீட்டு நிறுவனத்துக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 4:01 PM IST

முதலீடு செய்த பணத்தை ஏமாற்றியதாக சீட்டு நிறுவனத்துக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்

சென்னை:செய்யாறைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவர் ஏ.பி.ஆர் குரூப்ஸ் (APR Groups) என்ற பெயரில், செய்யாறு பகுதியைத் தலைமை இடமாகக் கொண்டு, சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த சீட்டு நிறுவனமானது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களைத் திறந்து தீபாவளிச் சீட்டு, மளிகை சீட்டு, மாதத்தவணை சீட்டு என பல்வேறு சீட்டுகளை சில ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.

அந்த வகையில், இந்த சீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் அந்தோணி ராஜ், சீட்டினை முழுமையாகக் கட்டி முடித்தவர்களுக்கு அதற்கான பொருட்களையும், பணத்தையும் சரிவர கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தோணி ராஜ் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பொருட்களை வழங்காமல் மோசடி செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரின் மீது எழுந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் அந்தோணி ராஜ் நடத்தி வந்த சீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் வந்து பார்த்தபோது, அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால், பணத்தைக் கட்டி ஏமாந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மவுண்ட் - பூந்தமல்லி சாலை அருகே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டுவர்களை அப்புறப்படுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடன் வந்தவர்கள் மயக்கம் அடைந்த பெண்களுக்கு உதவி செய்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "செய்யாறு பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஏ.பி.ஆர் குரூப்ஸ் நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களைத் திறந்து தீபாவளி சீட்டு, மாதச் சீட்டு மற்றும் நகை சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்தது.

இதில் 15 பேரை சேர்த்து விட்டால், ஒரு கார்டு இலவசம் என கூறியதன் பேரில், ஏராளமானோர் இந்த திட்டத்தில் பெண்களை சேர்த்து விட்டனர். இந்நிலையில், தற்போது காட்டுப்பாக்கத்தில் மட்டும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி வந்து பணத்தை திரும்பித் தருவதற்கு உறுதியளிக்க வேண்டும்.

மேலும், எங்களை நம்பி இந்த சீட்டில் சேர்ந்தவர்கள், எங்களது வீடுகளுக்கு வந்து பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்வதாக போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை" எனக் கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் பணம் கேட்ட ஊழியர்.. நுகர்வோர் நீதிமன்றம் ரூ.55 ஆயிரம் அபதாரம் விதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details