மழையில் சேதமடைந்த சாலையின் வீடியோ (Credits: ETV Bharat Tamil Nadu) திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியான ஆத்தூர் தொகுதியில், ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஆடலூர் செல்லும் சாலையில் கோம்பையில் இருந்து சாத்தாரப்பன் கோயில் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வரும் நிலையில், தினந்தோறும் விளையும் பொருட்களை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் காய்கறிச் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. முன்னதாக சாலை அமைக்கப்படும் போதே அப்பகுதி மக்கள் தரமான சாலை அமைக்கக் கோரி கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது பெய்த கனமழையால் ஒரே நாளில் சாலையில் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. அதேபோல், சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமும் ஆங்காங்கே உடைந்துள்ளது.
மேலும், தொடர்ந்து கனமழையானது பெய்யும் பட்சத்தில், அப்பகுதியில் அதிக தண்ணீர் வரும். அப்போது பாலம் முழுமையாக அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடி உடன் புதிய ஒப்பந்தம்; 200 இளையராஜாக்களை உருவாக்க இசைஞானி விருப்பம்! - ILAIYARAAJA MUSIC LEARNING CENTRE