திருநெல்வேலி: நெல்லை மாநகரப் பகுதிகளில் இன்று (டிச.14) காலை முதலே மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று (டிச.14) காலையில் மழையின் அளவு குறைந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், 118 அடி கொள்ளளவுள்ள மணிமுத்தாறு அணையில் தற்பொழுது 91 அடி தண்ணீர் உள்ளது. 143 அடி கொள்ளளவுள்ள பாபநாசம் அணையில் 82 அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகரப் பகுதியில் சுமார் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் இரவு முழுவதும் மழை பெய்து இன்று (டிச.14) அதிகாலை முதல் சாரல் மலையாக மாறியுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடுதாழை, உவரி, இடிந்தகரை, கூத்தன் குழி, பெருமணல் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், சுமார் 1500க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டும் அல்லாது, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அதி கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று (டிசம்பர் 14) சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாமிரபரணி ஆற்றில் இரண்டாவது நாளாக 70 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.