தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" - கரூரில் தொடக்கக் கல்வி ஆசிரியர் உண்ணாவிரதப் போராட்டம்! - டிட்டோஜாக்

TETO-JAC Strike: கரூரில், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக் TETO-JAC) சார்பில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை எண் 243-ஐ கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கரூர்
கரூர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 9:00 PM IST

அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தொடக்கக் கல்வி ஆசிரியர் உண்ணாவிரத போராட்டம்!

கரூர்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக் TETO-JAC) சார்பில் தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ வெளியிட்டுள்ளது.

இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமையில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று (ஜன.27) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளர் பெரியசாமி உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்துத் துவக்க உரை நிகழ்த்தினார். உண்ணாவிரதத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் வேலுமணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இறுதியாக உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைப்பதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்திற்குப் பிரத்தியேக பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில், "தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்குத் தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணி மாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என்ற அரசாணை 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பாகத் தமிழக முழுவதும் வட்டார அளவில் ஒரு நாள் மாலை நேரக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வலியுறுத்தினோம். இந்த நிலையில் இன்று (ஜன.27) உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். அடுத்த கட்டமாக, வரும் பிப்ரவரி 19 முதல் 21ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மூன்று நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என உயர் மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஏழை எளிய மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவசத் திட்டங்களுக்காக 4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் காலிப்பணியிடங்களை நிரப்புவதால் அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும் என கருதி வருகிறது.

இதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து ஆசிரியர் சங்கங்களும் அரசு ஊழியர் சங்கங்களும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறோம். இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூட கர்நாடகாவில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் திமுக அரசு, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசு ஊழியர்களின் நலம் கருதி பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், எங்களது உயர்மட்ட குழுவினை அழைத்துத் தீர்வு காண வேண்டும். எங்களது கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போலப் பேச்சு ஒன்னு"..பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

ABOUT THE AUTHOR

...view details