சென்னை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) 31 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செப்.10) நடத்த உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்று அதன் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நாளை (செப்.10) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் டிட்டோஜாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. கடந்தாண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், டிட்டோஜாக் அமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் 12 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனாலும், திட்டமிட்டபடி டிட்டோஜாக் அமைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.