திருப்பத்தூர்: கணவரின் சொத்தில் பங்குதர மறுக்கும் நபர்களிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி கணவனை இழந்த பெண் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து மலர் என்ற பெண் அளித்துள்ள மனுவில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்பவருடன் எனக்கு திருமணம் ஆனது. எனக்கு பிரியதர்ஷினி(17) என்ற மகளும், பரணிநாத்(15) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கணவர் சரவணன் இறந்து விட்டார். எனவே எனது பிள்ளைகளுடன் சிக்கனாங்குப்பம் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டில் மலர் தங்கியுள்ளேன். அங்கிருந்தபடியே குழந்தைகள் சிக்கனாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
மேலும் சரவணனின் தந்தை பெயரில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அவருடன் பிறந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் உள்ளனர். என்னுடைய கணவர் சரவணனுக்கு சேர வேண்டிய சொத்தினை பிரித்து தருமாறு, கணவரின் வீட்டாரிடம் கேட்டேன். அதற்கு சரவணனின் தம்பி ராமமூர்த்தி மற்றும் அனுராதா ஆகிய இருவரும் தகராறு செய்கின்றனர்.
இது குறித்து திமாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் கணவனை இழந்த நிலையில் கூலி வேலைக்கு சென்று தன்னுடைய பிழப்பை நடத்தி வருகின்றேன். தற்போது உடல் நல குறைவு ஏற்பட்டு வேலைக்கு கூட செல்ல முடியாமல் வறுமையில் உள்ளேன். மேலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றேன். எனவே வறுமையில் வாடும் என்னையும்,என் பிள்ளைகளையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு சேர வேண்டிய சொத்தினை வாங்கி தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என கூறியுள்ளார்.