சேலம்:நாமக்கல் அருகே கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில், சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu) நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சக்தி நாயக்கன் பாளையம், பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவரது 10 வயது மகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற நபர் (மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது) கத்தியால் கழுத்தில் வெட்டி அறுத்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுமி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ரூ.3 லட்சம் நிவாரணமும் அறிவித்தார். இந்த நிலையில், சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிறுமியின் உறவினர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சிறுமியின் உடல் இன்று மதியம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் கூறுகையில், “சிறுமி இறப்பதற்கு காரணமாக உள்ள குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கி குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். சிறுமி குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
சிறுமியின் குடும்பத்தினர் சிறுபான்மை மக்களாக ஊரில் வசித்து வருகின்றனர். அங்கு உள்ள பெரும்பான்மை சமூகத்தினர், அவர்களை வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லியும், கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டும் ஊருக்குள் வர வேண்டும். இல்லையென்றால் ஊரிலேயே வசிக்க முடியாது என்றும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சிறுமியின் குடும்பத்தினரையும் அவரது உறவினர்களையும் பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:10 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய ஐ.டி ஊழியர்; நாமக்கல் அருகே பரபரப்பு!