சென்னை:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து, இன்று காலை முதல் மேற்கு மாம்பலம் மற்றும் தி.நகர் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் தோண்டப்பட்டிருந்த மண் தற்போது கரைந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்துள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் சுரங்கப்பாதைகளின் நிலை என்ன? நம்பி போகலாமா?
இதனால், அப்பகுதியில் செம்மண் நிறத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தியாகராய நகரின் பேருந்து வழியாக செல்லும் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவதிக்குள்ளாயுள்ளனர். மேலும், பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை செல்லும் சாலையில் சாக்கடை உடைந்து, மழை நீரில் சாக்கடை நீர் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே தேங்கிய தண்ணீர் (Credits - ETV Bharat Tamil Nadu) அதேபோல், திருமுல்லைவாயல் அருகே திருத்தணி நெடுஞ்சாலையிலும் மழை நீர் குளம் போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக சி.டி.எச் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி சுற்றிலும் மழை நீர் ஆறு போல் தேங்கியுள்ளது. சென்னையில் இன்று ஆர்ஞ்சு அலர்ட் அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த 24 மணிநேரத்திற்கு ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில்," சில சமயங்களில் நாம் எதிர்பார்த்ததை விட மழை அதிகமாக இருக்கும். நேற்று நிறைய இடங்களில் மழை பெய்யும் என நினைத்தோம். ஆனால், ஒரு சில இடங்களில் மழை பெய்யவில்லை. காற்று சுழற்சி என்பது மாறுதலுக்கு உட்பட்டது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் 24 மணி நேரத்திற்கு ஒரே இடத்தில் நின்று விட்டது.
மூன்று நாட்களுக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது. 17 ஆம் தேதி காலை வரை சென்னையில் பரவலாக பலத்த மழை எதிர்ப்பார்க்கலாம்" என தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கன மழை தொடரும், சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்