ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகின் ஓட்டுநர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்குவதை கண்டித்தும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.